மாரத்தான் :
மாரத்தான் என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும். இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு 42.195 கிலோமீற்றராகும். இப்போட்டி 1896ஆம் ஆண்டிலிருந்தே ஒலிம்பிக் விளையாட்டாக இருந்தபோதும் 1921ஆம் ஆண்டில் தான் விதிமுறைகள் சீர்திருத்தப்பட்டன. தடகள விளையாட்டுப் போட்டிகள் தவிர உலகின் பல நகரங்களில் 800க்கும் கூடுதலான, தீவிர விளையாட்டாளர்கள் அல்லது உடல்நலம் பேணும் பொதுமக்களும் பங்கெடுக்கும், மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. பெரிய போட்டிகளில் ஆயிரக்கணக்கானவர் பங்கேற்பதும் உண்டு. முழுமையான தொலைவை ஓட முடியாதவர்களுக்காக அரை மாரத்தான் போட்டிகளும் உடன் நடைபெறும்.
கி.மு. 490ல் நடந்த மாரத்தான் போரில் பாரசீகர்களை தோற்கடித்த வெற்றிச் செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மாரத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு, இடையில் எங்கும் நிக்காமல் தொடர்ந்து ஓடிச் சென்றான் என்றும் செய்தியைத் தெரிவித்த சிறிது நேரத்தில் மயங்கி இறந்தார் என்றும் கூறப்படுகிறது. எனினும், இத் தகவலை உண்மையென உறுதிப்படுத்த தகவல் ஏதும் இல்லை. பெய்டிபைட்ஸ் மாரத்தானுக்கும் ஏதென்சுக்கும் இடையில் ஓடினார் என்பது பிற்கால எழுத்தாளர்களால் புனையப்பட்டது என்றும் கருத வாய்ப்பிருக்கிறது. இது போன்ற குறிப்பு கி.பி முதலாம் நூற்றாண்டில் புளூடார்ச் என்பவரால் எழுதப்பட்ட "ஒன் தி குளோரி ஒவ் ஏதென்ஸ்" என்ற நூலில் காணக்கிடைக்கிறது. அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் கணிப்பின் படி மாரத்தான் போர்க்களத்தில் இருந்து ஏதென்சுக்கு உள்ள தொலைவு 34.5 கி.மீ அல்லது 21.4 மைல்கள் ஆகும்.
மாரத்தான் போட்டிகள் முதன்முதலில் 1896 நவீன ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான மாரத்தான் போட்டி 1984 கோடை கால விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.